திங்கள், 28 செப்டம்பர், 2015

ராமன் எத்தனை ராமனடி !




ராமன் எத்தனை ராமனடி !
=====================================================================
ருத்ரா இ.பரமசிவன் 


துப்பாக்கிகளை கொண்டு விவசாயம் 
செய்து விடலாம் என்று 
மூளை  முறிந்தவர்கள் 
அறுவடை செய்ததெல்லாம் 
நொறுங்கிய கட்டிடங்களும் நசுங்கிய பிணங்களும் தான்.
மனிதத்தின் குரல் 
எந்த துப்பாக்கி ரவைகளாலும் 
தூளாக்க முடியாதது.
தேச பிதாவே 
நூற்றிஐம்பது ஆண்டுகளை நோக்கி நடக்கும் 
உன் கைத்தடி ஊன்றிய 
தடங்களின் ஒலிகள் 
எங்கள் இதயங்களில் தட தட வென்று 
கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றன.
சுதந்திரமும் ஜனநாயகமும் 
இங்கே 
குத்தாட்டம் போ டும் சினிமாக்களாய் 
ஒளியை 
எங்கோ தொலைத்த 
நிழலைத் துரத்திக்கொஂண்டு 
ஓடிக்கொண்டிருக்கின்றன.
வெள்ளைக்காரனிடம் ஒட்டு ப்பெட்டியைத்தானே 
வாங்கிக்கொடுத்தாய் !
இன்னமும் 
இவர்கள் இதில் குப்பையைத்தான் 
கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
பணபொருளாதாரத்தின் 
காகிதக்காடுகளில் 
சாதிமதப்  பேயாட்டங்களும்
"பிளாக்ஸ் போர்டுகள்"கொண்டு கோட்டை கட்டி 
ஆண்டு கொண்டிருக்கின்றன .
குண்டுகளை 
மார்பில் ஏந்தியும் 
உன் சர்வோதயக்கனவை நினைத்து தானே 
ஹே ! ராம் !
என்றாய்.
அன்று அந்த ரத்தச்சிவப்பின் அந்தியில் 
உன்னில் உன்னைத் 
தந்தவனைக்கூப்பிட்டாயா?
உன்னைக் 
கொன்றவனைக் கூப்பிட்டாயா?

==============================================================

  






வெள்ளி, 25 ஜூலை, 2014

ஒரு பரிணாமம்

2014-06-28_10-46-32_211.jpg


ஒரு பரிணாமம்
========================================ருத்ரா

காத்து காத்து
கல் மீது உட்கார்ந்தேன்.
எப்போது வருவாய்?
காலம் நீண்டது.
சுருண்டது.
நெளிந்தது வளைந்தது..
பாம்பை பார்த்தவனுக்கு
கயிறு கூட பாம்பு தான்.
பாம்பையே பார்த்தறியாதவனுக்கு
பாம்பை கயிறு என்று
கையில் எடுப்பான்.
நீ
எத்தனையோ முறை என்னிடம்
பேசியிருக்கிறாய்.
கண்களை வீசியிருக்கிறாய்.
அந்த ஒரு பார்வையில்
வந்த ஒரு சொல்
இப்போது வரை
காத்திருப்பு எனும்
மலைப்பாம்பாய்
என் உடல் சுற்றிக்கொண்டிருக்கிறது.
அது
முறுக்கினாலும் இன்பம்.
திருக்கினாலும் இன்பம்.
நீ
விழுங்கும்  வரை காத்திருப்பேன்.

===============================================ருத்ரா
அமெரிக்காவில் எல்.ஏ வில் ஸூ வில் ..

திங்கள், 2 ஜூன், 2014

வயிற்றைக்கிழித்து...

DSC00149.JPG




வயிற்றைக்கிழித்து...
==================================ருத்ரா இ.பரமசிவன்



என்ன கர்ப்பம் இது?
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
மசக்கையில்
புராணங்களைத்தின்று
வேதங்களைக் கடித்து
வாந்தி ஒன்றும் 
நிற்கிறவழியாய் தெரியவில்லை.
கீதையை
சுழட்டி சுழட்டி சொல்லி
விஸ்வரூபங்களில்
தலைசுற்றல் மயக்கம் வேறு.

"அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை"

எவனோ ஒரு வள்ளுவன்
கிளிகளிடம் ஜோஸ்யம் கேட்கவில்லை.
சோழிகள் உருட்டவில்லை.
நட்சந்திரங்களைப்பார்த்து
கணக்கு கட்டங்கள் போடவில்லை.
ஓலை நறுக்கில் கிறுக்குவது போல்
வரிகள் பிளந்து காட்டிவிட்டு போய்விட்டானே.

முச்சந்தியில்
தேங்காய் உடைத்து போட்டுவிட்டு
போய்விட்டானே.

சமுதாயங்கள் சில‌
முட்டை உடைத்துக்கொண்டு வந்தன.
அடைகாத்த பறவையின்
குஞ்சுகள் மட்டும் வரவேயில்லை. 

இன்னும் அடிவயிற்றை
கரும்பு ஜூஸ் எடுக்கிற சக்கரங்கள்
பிழிந்து கொண்டே யிருக்கின்றன.
வலி வலியை பிசைந்து
தின்று கொண்டேயிருக்கின்றது .

கணினித்திரையில்
கோணா மாணாவென்று படங்கள்.
இதோ பிஞ்சுக்கை.
அதோ மென்பஞ்சுக்கால்கள்.
சின்ன இதயக்குமிழியின்
மிக மிகச் சிறிய மூச்சுக்குமிழிகளின்
கள களப்பு சங்கீதங்கள்.
இதோ இதோ என்கிறார் டாக்டர்.
கருப்பு வங்கியில்
கரன்சி மூட்டைகள்
கர்ப்ப முட்டையை
உடைத்து சுக்கு நூறாக்கி விடும்
போலிருக்கிறதே.
ஒன்றுக்கும் வழியில்லை.
குறுக்காக இன்சைஸ் பண்ண‌
இன்ஸ்ட்ருமெண்டை
டாக்டர் கீறுகிறார்.

சிவப்புக்கோளம் சிதறுகிறது.
எங்கு பார்த்தாலும் வழிந்து ஓடுகிறது.
கங்கையா? கூவமா?
சாக்கடையின் பிரளயமா?
தெரியவில்லை.
எண்ணி முடித்து விட்டார்கள்.
கம்பியூட்டரின் பொத்தான்களில்
ராட்சச ஸ்பரிஸங்கள்..
கண்கள் கூச கூச‌
வெளிச்சத்தின் பிரளயம்.
ஆனால் 
எதுவுமே பார்க்க முடியவில்லை.
எதையுமே அடையாளம் தெரியவில்லை.

யாரும் எதிர்பாராத சிசேரியனில்
வலி வழியே 
மீண்டும் ஒரு வலி பிறந்திருக்கிறது.

=====================================================ருத்ரா





அகத்தியன் அருவி

picasabackground.jpg


அகத்தியன் அருவி
===================================ருத்ரா


நயாகாராவைப் பார்த்துவிட்டு
இங்கே வந்ததும்
அங்கே அவன் பிரமாண்ட வெள்ளைத்தாடி
விரிந்து பரந்து வீழ்ந்தது தெரிந்தது
இங்கே
அபிரஹாம் லிங்கன்
அருவியில் பெர்முடாவுடன்
அமைதியாக குளித்துக்கொண்டிருந்தது
தெரிந்தது.

நினவின் அருவிகளுக்கு
ஆறு தேவையில்லை.
வாய் பிளந்து
"மலை"க்க வைக்கும் மலைகளும் தேவையில்லை.

கொஞ்சம் சிந்தனையே போதும்.
அதுவே கொஞ்சம் மெய்மறந்தால்
உங்களை
ஏர்வாடியிலோ
குற்றாலத்திலோ
குணசீலத்திலோ
கொண்டு போய்
உட்கார்த்தி வைத்து விடுவார்கள்
ஜாக்கிறதை.

பாபநாசம் படிக்கட்டுகள் இறங்கி
முண்டக்கண் மீன்கூட்டங்களோடு
கால் அளைந்து
மீன்களால் கிச்சு கிச்சு மூட்டப்பட்டு
கொஞ்சம் புல்லரித்தபோது
டாலர்கள் எல்லாம் வெறுமே
செத்தைகளாக‌
அந்த நீர்ச்சுழிப்பில் மிதந்து
விரட்டப்பட்டு ஓடுகின்றன.

தாமிரபரணி
வைரங்களின் பரல்களாக‌
முகத்திலும் மூக்கிலும்
தொப்பூளிலும்
இடுப்பில் கட்டிய துண்டு வழியாக‌
வருடித் தழுவி இறங்குப்பொழுது
வைரத்திரவங்களாய்
ஏழு வர்ணங்களில்
கண்ணடிக்கின்றன.

சில சமயங்களில்
அப்படியே பாறையில்
உருண்டு திரண்டு உடைந்து சிதறி
விழும்போது சூரியன் புகுந்து
ஏழுவர்ண ரத்தமாய்
பிரவாகம் செய்கிறது.
யாரோ இருவர் எங்கேயோ எப்போதோ
காதலை
இப்படி விழுந்து
ரத்தக்கலைடோஸ்கோப்பில்
கோணம் திருப்பி திருப்பி
காட்டுகிறது தெரிகிறது.

நாவல் மரங்கள்
பெண்களின் கருவிழிகளை
பழங்கள் என்ற பெயரில்
காற்றில் ஆட்டி ஆட்டி
அசைக்கின்றன.
நீர்த்திவலைகளின் ஊடே
அந்த கருப்பாயிகளின்
கண்டாங்கிச்சேலைகள்
கொசுவங்களை சொடக்கும்போது
உலகம் தலைகீழ்.

"எலே ..இந்தா ரெண்டு இட்டிலி"
கரண்டைக்கால் ஆழத்தில்
வெண்பட்டு விரிப்பில் படுத்துக்கொண்டு
ஆற்றில் குளித்துக்கொண்டே
கையில் அம்மா பாசத்தோடு இடுவதை
வாங்கித்தின்று கொண்டு..
தாமிரபரணியின் ருசி
என் அம்மா அரைத்த ஈராய்ங்கத்தொவையலுடன்
இழைந்து கொண்டு விடும்.

மருதமரக்கொப்புகளும்
வளைந்து குனிந்து
ஆற்றுக்கன்னத்தை உரசி
முத்தமிட்டுக்கொண்டிருக்கும்.
அந்த அமுத எச்சில்களும்
எங்களைக் கழுவிக்கொண்டு ஓடும்போது
நரம்புக்குள் கூச்சம் யாழ் மீட்டும்.

பெரிய குரங்கு நடுத்தரக்குரங்கு
குட்டிக்குரங்கு குட்டியிலும் குட்டிக்குரங்குகள் என்று
கொத்து கொத்துகளாய்
படிக்கட்டுகளிலும்
மரக்கிளைகளிலும்
மாணிக்கக் குடிமக்களாய்
ஏதோ ஓட்டு போடும் பரபரப்பில்
அவை "ஒட்டுப்பொறுக்கி"களாய்
அங்கும் இங்கும் தாவுவது
கண்கொள்ளாக்காட்சி தான்.
வைரமும் முத்தும் பவளமும்
சிதறிக்கிடப்பதாய்
அந்த பொறி கடலை வகையறாக்கள்
அங்கே இறைந்து கிடப்பதாய்
அவை தேடி தேடி வரும்.
நிமிடத்தில்
அவையாவும்
அவற்றின் வாய்க்குள்
தாடைகள் புடைக்க பத்திரமாய்
சேமிக்கப்பட்டு விடும்.

எங்கள் அந்தக்காலத்து
நர்ஸரி ரைம் களான‌
"பாவநாசத்துக் கொரங்கு
படியை விட்டு எறங்கு'
குத்தாலத்துக் கொரங்கு
கொப்பை விட்டு எறங்கு"
என்ற வரிகள் எல்லாம்
எங்கள் செல்லச்சிணுங்கல்
சண்டைகளிலும் அரங்கேறும்.

அகத்தியன் அருவி
அகத்தில் "குணில் பாய்" முரசின்
ஒலிகளாக‌
அந்த முரட்டுப்பாறைகளில்
மஞ்சள் உரைத்து
நீரில் மஞ்சள் நிழல்களை
கரையவிட்டு குளிக்கும்
மங்கையர் தருணங்களை
மெகாத் தொடர்களாக்கி
நெளிந்து நீண்டு ஓடிக்கொண்டே இருக்கின்ற‌ன.

===============================================ருத்ரா