திங்கள், 2 ஜூன், 2014

வயிற்றைக்கிழித்து...

DSC00149.JPG




வயிற்றைக்கிழித்து...
==================================ருத்ரா இ.பரமசிவன்



என்ன கர்ப்பம் இது?
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
மசக்கையில்
புராணங்களைத்தின்று
வேதங்களைக் கடித்து
வாந்தி ஒன்றும் 
நிற்கிறவழியாய் தெரியவில்லை.
கீதையை
சுழட்டி சுழட்டி சொல்லி
விஸ்வரூபங்களில்
தலைசுற்றல் மயக்கம் வேறு.

"அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை"

எவனோ ஒரு வள்ளுவன்
கிளிகளிடம் ஜோஸ்யம் கேட்கவில்லை.
சோழிகள் உருட்டவில்லை.
நட்சந்திரங்களைப்பார்த்து
கணக்கு கட்டங்கள் போடவில்லை.
ஓலை நறுக்கில் கிறுக்குவது போல்
வரிகள் பிளந்து காட்டிவிட்டு போய்விட்டானே.

முச்சந்தியில்
தேங்காய் உடைத்து போட்டுவிட்டு
போய்விட்டானே.

சமுதாயங்கள் சில‌
முட்டை உடைத்துக்கொண்டு வந்தன.
அடைகாத்த பறவையின்
குஞ்சுகள் மட்டும் வரவேயில்லை. 

இன்னும் அடிவயிற்றை
கரும்பு ஜூஸ் எடுக்கிற சக்கரங்கள்
பிழிந்து கொண்டே யிருக்கின்றன.
வலி வலியை பிசைந்து
தின்று கொண்டேயிருக்கின்றது .

கணினித்திரையில்
கோணா மாணாவென்று படங்கள்.
இதோ பிஞ்சுக்கை.
அதோ மென்பஞ்சுக்கால்கள்.
சின்ன இதயக்குமிழியின்
மிக மிகச் சிறிய மூச்சுக்குமிழிகளின்
கள களப்பு சங்கீதங்கள்.
இதோ இதோ என்கிறார் டாக்டர்.
கருப்பு வங்கியில்
கரன்சி மூட்டைகள்
கர்ப்ப முட்டையை
உடைத்து சுக்கு நூறாக்கி விடும்
போலிருக்கிறதே.
ஒன்றுக்கும் வழியில்லை.
குறுக்காக இன்சைஸ் பண்ண‌
இன்ஸ்ட்ருமெண்டை
டாக்டர் கீறுகிறார்.

சிவப்புக்கோளம் சிதறுகிறது.
எங்கு பார்த்தாலும் வழிந்து ஓடுகிறது.
கங்கையா? கூவமா?
சாக்கடையின் பிரளயமா?
தெரியவில்லை.
எண்ணி முடித்து விட்டார்கள்.
கம்பியூட்டரின் பொத்தான்களில்
ராட்சச ஸ்பரிஸங்கள்..
கண்கள் கூச கூச‌
வெளிச்சத்தின் பிரளயம்.
ஆனால் 
எதுவுமே பார்க்க முடியவில்லை.
எதையுமே அடையாளம் தெரியவில்லை.

யாரும் எதிர்பாராத சிசேரியனில்
வலி வழியே 
மீண்டும் ஒரு வலி பிறந்திருக்கிறது.

=====================================================ருத்ரா





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக